இன்றைய காலத்தில் செல்போன் இல்லாத நபர்களும் இல்லை, அதே சமயம் செல்போன் இல்லாமல் ஒருவராலும் இருக்கவும் முடியாது.அந்த அளவிற்கு செல்போன் மீது மோகம் கொண்டுள்ளனர் இன்றைய தலைமுறையினர். செல்போனில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கம் சென்று விட்டாலே எத்தனை மணி நேரம் பார்க்கிறோம் என்றே தெரியாத அளவிற்கு வீடியோக்களை பார்ப்பதில் மூழ்கி இருப்போம். இவ்வாறு தொடர்ந்து அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்குகிறார் மனநல மருத்துவர். அவரின் விளக்கத்தினை தற்போது காண்போம்.
மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம் என்றால் அதில் சில நல்ல விஷயங்களும் உள்ளது, அதே சமயம் சில தீமைகளும் உள்ளது. அதாவது இந்த செல்போன் பயன்படுத்துவதால் தான் நாட்டு நடப்புகளையும் மற்ற தகவல்களையும் தெரிந்து கொள்கிறோம். அதே சமயம் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது. மற்ற மக்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. நமக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளவும் உதவுகிறது. மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத மன அழுத்தத்தை கூட செல்போனில் ரீல்ஸ் பார்ப்பதன் மூலம் குறைத்துக் கொள்கின்றனர்.
அதே சமயம் இதனால் தீமைகளும் உள்ளது. அதாவது சிறு குழந்தைகளுக்கும் நாம் செல்போனை காட்டி தான் உணவு ஊட்டுகிறோம். 5 நிமிடம் மற்றும் 10 நிமிடம் காட்டி உணவு ஊட்டினாலும் கூட அந்த குழந்தைக்கு அந்த உணவின் ருசி எவ்வாறு உள்ளது வயிறு நிறைந்து விட்டதா இல்லையா என்பது கூட தெரியாத அளவிற்கு அந்த செல்போனில் மூழ்கி இருக்கும். இதனால் அக்குழந்தைக்கு கவன சிதைவு ஏற்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களும் கூட செல்போனில் உள்ள ரீல்ஸ்களை பார்ப்பதன் மூலம் அதுதான் உண்மையான வாழ்க்கை என நினைத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிக் கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் ரீல்சில் போடுவது உண்மை அல்ல என்ற புரிதல் கூட இல்லாத அளவிற்கு மாறிவிடுகின்றனர். ஒரு சிலர் செல்போன் பயன்படுத்தினாலும் கூட அடுத்தடுத்த வேலைகளை பார்ப்பதற்கு என ஒரு அரை மணி நேரத்தில் சென்று விடுகின்றனர். ஆனால் ஒரு சிலரால் அதனை செயல்படுத்த முடியாது. செல்போனை அவர்கள் நினைத்தாலும் கூட கையை விட்டு கீழே வைக்க முடியாத அளவிற்கு அடிமையாகி இருப்பார்கள்.
செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஒரு சில வீடுகளில் பிரச்சனை ஏற்படும். எனவே செல்போனை அதிகம் பார்க்க கூடாது என நினைத்தாலும் கூட அவர்களால் முடியாது. அதுவே அவர்களுக்கு ஒரு விதமான பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். இவ்வாறு இருப்பவர்கள் ஒரு மருத்துவரை அணுகி பார்ப்பது நல்லது. செல்போனை மிகவும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கும்போது மற்றவர் கூப்பிட்டால் கூட ஒரு விதமான கோபம் அவர்களுள் ஏற்படும் இது செல்போனிற்கு அடிமையாக இருப்பதை உணர்த்துகிறது.
இவ்வாறு அடிமையாக இருப்பதனால் அவர்களின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். இன்று பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களிடம் தான் அதிகமாக செல்போன் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுடைய கண்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களுடைய கவனிக்கும் திறன் குறைந்து ஒரு செயலை சில நிமிடங்களுக்கு மேல் அவர்களால் கவனிக்க முடிவதில்லை.
இரவு நேரங்களிலும் அதிக அளவில் செல்போனை பயன்படுத்துவதால் அவர்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. செல்போனிலிருந்து வரக்கூடிய கதிர்வீச்சினால் கேன்சர் உருவாகுமா? என்ற ஆராய்ச்சியும் நடைபெற்று கொண்டு வருகிறது. ஒரு சில ஆராய்ச்சிகள் கேன்சர் வரும் என்றும் கூறியுள்ளனர். எனவே குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை குறைக்க பெற்றோர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். செல்போனை குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்தும் வகையில் செட்டிங்ஸை மாற்றி அமைத்து குழந்தைகளின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்.