AMMK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக-திமுக என இருந்த தமிழக அரசியல், தற்போது அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டியாக மாறப்போகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அதிமுகவின் பிரிவினை. அதிமுக தற்சமயம் நான்கு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அக்கட்சியில் அங்கம் வகித்து வரும் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன், புதிய கட்சியான தவெகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கேடு விதித்ததற்காக முதலில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இவர், பிறகு கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். அப்போது டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோருடன் தொடர்பில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அவர்களுக்கே தெரியாது என்று கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து பேசிய சசிகலா, 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபர், ஒருவர் மீது இருக்கும் கோவத்தில், இவ்வாறான முடிவுகளை எடுப்பதை என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
இவரின் இந்த கருத்து, செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததில் சசிகலாவிற்கு விருப்பமில்லை என்பதை காட்டியுள்ளது. சசிகலாவின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிப்பது போல, டிடிவி தினகரன் ஒரு கருத்தை கூறியுள்ளார். செங்கோட்டையன் போன்ற 53 ஆண்டு அனுபவம் உள்ளவர் ஒரு கட்சியை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டால், அந்தக் கட்சி தன்னை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் கோபத்தில் அல்ல, சிந்தனைக்குப் பிறகே முடிவு எடுத்திருப்பார் என்று பேசியுள்ளார். தினகரனின் இந்த கூற்று சசிகலாவை எதிர்ப்பது போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

