பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோரின் உடல் தகுதி என்ன..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது!!
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது காயம் காரணமாக விலகி இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரின் உடல்தகுதி அதாவது ஃபிட்னஸ் குறித்து முக்கிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளான அனைத்து விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செய்து வருகின்றது. ஆனால் இந்திய அணியால் கடைசி 10 வருடங்களில் எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியவில்லை. கடைசியாக முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி தலைமையில் இந்திய அணி 2013ம் ஆண்டு ஐசிசியின் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சேம்பியன்ஸ் டிராபியை வென்றது.
அதன் பிறகு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடர், டி20 தொடர், சேம்பியன்ஸ் டிராபி தொடர், தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்ட உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி ஆகிய போட்டிகளில் அரையிறுதிப் போட்டி இறுதிப் போட்டி வரை வந்த இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே மிச்சம். இந்த தோல்விகளுக்கு சுமாரன பேட்டிங், பந்துவீச்சு, பயிற்சி எடுக்கவில்லை என ஆயிரம் காரணங்களை கூறினாலும் முதன்மை வீரர்கள் காயத்தால் வெளியேறியது தான் இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகின்றது.
காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் இந்திய அணியில் இருந்து விலகியதன் காரணமாக 2022ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஸ்ஷிப் தொடர்களில் இந்திய அணிக்கு தோல்வியே கிடைத்தது. மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியது, நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர்களின் காயமும் இந்திய அணியின் பின்னடைவுக்கு காரணமாக உள்ளது. இந்த நிலையில் முனனணி வீரர்களின் உடல்தகுதி குறித்து முக்கிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் “பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார்கள். மேலும் இவர்கள் இருவரும் வலைப் பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெறும் சில போட்டிகளில் விளையாடவுள்ளனர். அதில் பிசிசிஐ மருத்துவர்கள் அவர்களை கண்காணித்து இறுதி முடிவு வெளியிடுவார்கள்.
கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பிட்னஸக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பிசிசிஐ மருத்துவக் குழு கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவர்களின் முன்னேற்றத்திலும் திருப்தி அடைந்துள்ளது.
விபத்தில் சிக்கிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். மேலும் அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தற்பொழுது வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.