நாம் அணியக்கூடிய செருப்பினை நமது காலின் அளவிற்கு சரியாக பயன்படுத்தினால் செல்வ வளம் பெறுவது முதல் வாழ்க்கை முறை சிறப்பாக அமைவது வரை அனைத்துமே சிறப்பாக அமையும். மேலும் சனி தோஷ பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதற்கான விளக்கத்தினை தற்போது காண்போம்.
நாம் கோவிலுக்கு சென்றாலும் சரி, வீடுகளில் செருப்பினை விடும் பொழுதும் சரி நமது செருப்பினை ஜோடியாக ஒரு இடத்தில் விடுகிறோம் என்றால் நமது உடலும் மனமும் அமைதியான நிலையில் இருப்பதாக அர்த்தம். செருப்பினை நாம் பல இடங்களுக்கு தொட்டு செல்வோம் அசுத்தமான இடங்களுக்கும் செல்வோம், சுத்தமான இடங்களுக்கும் செல்வோம். ஆனால் செருப்பினை நமது வீட்டிற்கு வெளியே தான் விட வேண்டும். ஒரு சிலர் வீட்டிற்கு உள்ளேயும் செருப்பினை போட்டுக்கொண்டு இருப்பர். அவ்வாறு இருப்பவர்கள் நிலை வாசலின் மீது செருப்பினை போட்டுக்கொண்டு நிற்கவோ, உட்காரவோ கூடாது. ஏனென்றால் இந்து சாஸ்திரத்தின் படி தலைவாசல் என்பது நமது குலதெய்வத்தின் அம்சமாக நினைத்து வணங்கி வருகிறோம். அப்படிப்பட்ட நிலை வாசலுக்கு உள்ளேயும் நிலை வாசலின் மீதும் செருப்பினை போட்டு செல்வது நல்லது கிடையாது. வீட்டிற்குள் செருப்பினை போட்டுக் கொள்வதை முடிந்த அளவிற்கு தவிர்த்துக் கொள்வது நல்லது.
லட்சுமி கடாட்சமாக விளங்கக்கூடிய அரிசி, பருப்பினை செருப்பினை போட்டுக்கொண்டு எடுக்கக் கூடாது. குறிப்பாக சமையலறையில் செருப்பினை பயன்படுத்தக் கூடாது. செருப்பினை காலில் அணிந்து கொண்டு உணவினை உண்ணக்கூடாது. பெரும்பாலும் நாம் வெளியில் செல்கிறோம் என்றால் ஹோட்டலில் உணவினை உண்ணும் பொழுது செருப்பினை போட்டுக் கொண்டு தான் உண்போம். அவ்வாறு செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் உணவு என்பது அன்னலட்சுமி இன் அம்சமாக உள்ளது. எனவே அத்தகைய உணவிற்கு தகுந்த மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வது விவசாயிகளுக்கும் நாம் கொடுக்கக்கூடிய மரியாதையாக இருக்கும்.
அதேபோன்று செருப்பினை போட்டுக்கொண்டு சுப விசேஷ பத்திரிகைகளை வாங்குவது, புது தம்பதிகளையோ அல்லது யாரேனும் ஒருவரையோ ஆசீர்வதிப்பது, யாரேனும் ஒருவருக்கு பணம் வழங்குவது போன்ற சமயங்களில் செருப்பினை போட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. நாம் அணிந்து கொண்டிருக்கும் செருப்பு மிகவும் மோசமான நிலையிலோ அல்லது பிஞ்ச செருப்பினை தைத்தோ வறுமையின் காரணமாக அதை தொடர்ந்து போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. முடிந்த அளவிற்கு விரைவில் புதிய செருப்பினை வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது தொடர்ந்து வறுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பினை அளித்துக் கொண்டே இருக்கும்.
அதேபோன்று ஏழை எளியவர்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கும் செருப்பினை தானமாக வழங்குவதன் மூலம் சனிபகவானின் அருளை பெற முடியும். தொழிலில் முன்னேற்றம் வீழ்ச்சி அடையும் பொழுது ஒரு புதிய செருப்பினை வாங்கி கோவில்களில் விட்டு வருவதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் காண முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால் அவ்வாறு விட்டு வரக்கூடிய செருப்பினை யாரேனும் ஒருவர் பயன்படுத்திக் கொள்வர். இதனால் தோஷம் நீங்கி தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
ஆனால் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் செருப்பு எதேர்ச்சியாக கோவிலில் தொலைந்து விட்டது என்றால் நமது கர்மா நீங்கி சனி பகவானின் தோஷமும் நம்மை விட்டு நீங்கும் எனவும் கூறப்படுகிறது.