ADMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைவரது எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக திட்டங்களை வகுத்து வரும் நிலையில் அதிமுக, பாமக போன்ற பெரிய கட்சிகளிடையே தலைமை போட்டி அதிகரித்துள்ளது. இதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் தான் டெல்லி வரை சென்று இந்திய அளவில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பேசிய இ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கியவர்களை சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியதோடு, தேவைப்பட்டால் தே.ஜ கூட்டணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தையும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கட்சியில் இருந்து பிரிந்த ஓ.பி.எஸ்., டி.டி.வி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோர் எந்த பதிலும் கூறாமல் உள்ளனர். சமீபத்தில் தே.ஜ கூட்டணியிலிருந்து விலகிய டி.டி.வி தினகரன், முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ்யை தவிர வேறு யாரை நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் பாஜக தான் எங்களை காப்பாற்றியது என்று கூறிய இ.பி.எஸ்-ன் கருத்துக்கு ஓ.பி.எஸ்-ம், டி.டி.வி தினகரனும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இதனால் இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற இவர்கள், அவர் கூறியதை ஏற்று தே.ஜ கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்றும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக செயல்படுவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.