TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார். தவெகவிற்கு கிடைத்த ஆதரவை கண்ட கட்சிகள் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்த்திருந்தனர். திமுக, பாஜகவை எதிரி என்று கூறியதால் அவர்களுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் அதிமுக உடன் சேர்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதிமுகவிற்கான கதவும் மூடப்பட்டு விட்டது.
இதனை தொடர்ந்து அதிமுகவிலிருந்து பிரிந்த செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோருடன் சேர்வார் என்று அனைத்து ஊடகங்களும் செய்தியை வெளியிட்ட நிலையில் தற்போது விஜய் அதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார். ஏனென்றால் விஜய் கட்சி ஆரம்பித்த பொழுதே திராவிட கட்சிகளுக்கு மாற்று என்றும் புதிய அரசியலை கையில் எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இப்படி இருக்க அதிமுகவிலிருந்து பிரிந்த திராவிட வாடை உள்ளவர்களை தவெகவில் சேர்த்தால் விஜய் உருவாக்கி வைத்திக்கும் அரசியல் அடையாளம் காணாமல் போய்விடும் என்று விஜய் நினைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் நால்வர் அணி விஜய் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். கரூர் சம்பவத்தில் விஜய் மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்ட போதும் இவர்கள் நால்வரும் விஜய்க்கு மறைமுகமாக ஆதரவை தெரிவித்து வந்தனர். இப்படி இருக்கையில் அதனை கண்டு கொள்ளாத விஜய் தன்னுடைய அடுத்த அரசியல் நகர்வை எப்படி திட்டமிட போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

