எந்த கிழமையில் எந்தெந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்..??

Photo of author

By Janani

எந்த கிழமையில் எந்தெந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்..??

Janani

 

ஒவ்வொரு நாட்களுக்கும் அதாவது ஒவ்வொரு கிழமைகளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் இருக்கும். வெள்ளிக்கிழமை நாட்களில் மகாலட்சுமிக்கு உரிய கல் உப்பை வாங்குவதால் செல்வ வளம் எவ்வாறு அதிகரிக்குமோ, அதேபோன்றுதான் ஒவ்வொரு கிழமைகளுக்கும் உரிய பொருட்களை நாம் வாங்கும் பொழுது, பலவிதமான அதிர்ஷ்டங்களை நாம் பெற முடியும்.

அந்தந்த கிழமைகளுக்கு உரிய பொருட்களை வாங்கினால் அந்தப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். நமது முன்னோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் உடைய பொருட்கள் குறித்தும், அந்த பொருட்களை அந்த கிழமைகளில் வாங்கும் பொழுது உண்டாகக்கூடிய நன்மைகள் குறித்தும் கூறியுள்ளனர். ஒவ்வொரு கிழமைக்கும் உடைய பொருட்கள் என்னென்ன என்பது குறித்து காண்போம்.

திங்கள் கிழமை:

திங்கள் கிழமை என்பது சந்திர பகவானுக்கும், சிவபெருமானுக்கும் உரிய நாட்கள் ஆகும். எனவே திங்கள் கிழமைகளில் சந்திர பகவான் மற்றும் சிவனை வழிபடுவது பலவிதமான நன்மைகளை நமக்கு ஏற்படுத்தும். மேலும் இந்த கிழமையில் வெண்மை நிறத்தில் உள்ள பொருட்களை வாங்குவது குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

அந்த வகையில் அரிசி, இனிப்பு வகைகள், தானியங்கள், பால் பொருட்கள், மின்சாதன பொருட்கள், எழுதும் பொருட்கள் ஆகியவற்றை வாங்கலாம். மேலும் இந்த பொருட்களை நாம் திங்கள் கிழமையில் வாங்கும் பொழுது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

செவ்வாய் கிழமை:

செவ்வாய்க்கிழமை என்பது முருகருக்கும், ஆஞ்சநேயருக்கும் உகந்த நாள் ஆகும். இந்த நாட்களில் நிலம் வாங்குவது மற்றும் விற்பது இதுபோன்ற செயல்களை செய்வது மிகவும் சிறப்பு என்று கூறப்படுகிறது. அதேபோன்று சொத்து தொடர்பான அனைத்துவித செயல்களையும் செய்ய இந்த செவ்வாய்க்கிழமை உகந்த நாள்.

ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் பால், மரம் செடிகள் வாங்குவது, தோல் சம்பந்தமான பொருட்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

புதன் கிழமை:

புதன்கிழமை என்பது புதன் பகவானுக்கு உரிய நாள் ஆகும். இந்த நாட்களில் புதன் பகவான், சித்தி மற்றும் புத்தி ஆகிய கடவுள்களை வழிபடுவது சிறப்பை தரும். இந்த நாட்களில் பச்சை காய்கறிகள், வீட்டு அலங்கார பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், கல்வி சம்பந்தமான பொருட்கள் ஆகியவற்றை வாங்குவது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

ஆனால் இந்த நாட்களில் அரிசி, மருந்து பொருட்கள், வீடு, மனைகள் வாங்குவது, பாத்திரங்கள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை வாங்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

வியாழன் கிழமை:

வியாழன் கிழமை அன்று குரு பகவான் மற்றும் பிரகஸ்வதியை வணங்கி வருவது பல நன்மைகளை உண்டாக்கும். இந்த நாளில் மின்னணு சாதனங்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவது அதிர்ஷ்டத்தை தரும். மேலும் அசையும் சொத்துக்களை வாங்கவும் இந்த நாள் நல்ல நாளாக இருக்கும்.

ஆனால் இந்த நாட்களில் கண்ணாடி சம்பந்தமான பொருட்களையும், மிகவும் கூர்மையான பொருட்களையும் வாங்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

வெள்ளிக்கிழமை:

வெள்ளிக்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய நாள். இந்த நாட்களில் மங்களகரமான பொருட்களை வாங்குவதும், வாசனை திரவியங்களை வாங்குவதும், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றை வாங்கலாம். இதன் மூலம் வீட்டின் பொருளாதார சூழல் அதிகரிக்கவும் செய்யும்.

மேலும் கருப்பு எள், கல் உப்பு, சமையல் எண்ணெய், விளக்கேற்றும் எண்ணெய், மரம் சார்ந்த பொருட்கள், துடைப்பம் ஆகியவற்றை வாங்குவது நல்லது. ஆனால் இரும்பால் ஆன பொருட்களை வெள்ளிக்கிழமையில் வாங்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த நாளில் மசாலாக்களை அரைப்பது, புதிய வாகனங்கள் வாங்குவது ஆகியவற்றை தவிர்த்துக் கொள்வது நல்லது.

சனிக்கிழமை:

சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு உரிய நாள் என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தக் கிழமையில் அதிக எடை உள்ள பொருட்கள் மற்றும் வீடு, மனைகள் வாங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சனிக்கிழமையில் இந்த பொருட்களை வாங்குவது வீட்டில் கடன், வறுமை மற்றும் நோய்களை ஏற்படுத்தி விடும்.

மேலும் இந்த நாட்களில் தண்ணீர் ஊற்றி வைக்கும் குவளைகள் மற்றும் பூச்செடிகள் வாங்குவது மிகவும் சிறப்பு.

ஞாயிற்றுக்கிழமை:

ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை வழிபடுவதன் மூலம் கண் பார்வை தெளிவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்தக் கிழமையில் கண்ணாடி சார்ந்த பொருட்களை வாங்குவது மிகவும் சிறப்பு.

சிவப்பு நிறத்தில் உள்ள பொருட்கள், கோதுமை தானியம், வண்டி வாகனங்கள் வாங்குவது போன்றவை இந்த நாட்களில் சிறப்பாக இருக்கும்.