விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் வாக்கு யாருக்கு? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விக்கிரவாண்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.அந்த தொகுதி முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கடுமையான பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த இடைத்தேர்தலுக்கான ஓட்டு பதிவு வரும் 10-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா,பாமக சார்பில் சி.அன்புமணி மற்றும் நாதக சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது. அதிமுக போட்டியிடாத காரணத்தால் அந்த கட்சி தொண்டர்களின் வாக்குகளை பெற நாம் தமிழர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் சீமான் அவர்கள் இந்த தேர்தல்களில் பாமகவையோ, அதிமுகவை பற்றியோ எந்த விமர்சனமும் செய்ய வேண்டாம்.நமது ஒரே எதிரியான திமுக மக்களுக்கு செய்த துரோகங்களை மட்டும் எடுத்து கூறி வாக்கு கேளுங்கள் என்று தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் அதிமுக தலைமைக்கும் தங்களை ஆதரிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இங்கு போட்டியிடும் வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.அவர் நேற்று பொது கூட்டம் ஒன்றில் பேசும் போது இந்த தேர்தலில் போட்டியிடாத கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவின் தொண்டர்கள் அனைவரும் தங்களது கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பங்கேற்றிந்த பாமக கடந்த மக்களவை தேர்தலில் அங்கிருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக பாமகவுக்கு மறைமுக ஆதரவை அளிக்கிறது என திமுக தலைவர்கள் பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிமுக தொண்டர்களை வாக்களிக்க வேண்டி அன்புமணி ராமதாஸ் பேசிய அந்த கருத்துக்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அன்புமணியின் பேச்சுக்கு எதிர்த்து சந்தர்ப்பவாத அரசியல் என கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணித்து போல மற்ற கட்சிகளும் செய்து இருக்க வேண்டும்.அது தான் திமுக ஆட்சிக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நாம் கொடுக்கும் பதிலடியாக அமைந்து இருக்கும்.அதனை செய்யாமல் இப்பொது வந்து ஆதரவு கேட்பது சந்தர்ப்பவாத அரசியலின் வெளிப்பாடு போல் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் முடிவுப்படி அதிமுகவினரும் தேர்தலை புறக்கணிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.