கோவிலுக்கு செல்லும் பொழுது அல்லது பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது கருப்பு உடை அணியக் கூடாது எனக் கூறுவது எதனால்..?!

Photo of author

By Janani

கோவிலுக்கு செல்லும் பொழுது அல்லது பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது கருப்பு உடை அணியக் கூடாது எனக் கூறுவது எதனால்..?!

Janani

இறைவனை வழிபடும் பொழுது நாம் உடுத்தக்கூடிய உடைகள் என்பதில் பலவிதமான கட்டுப்பாடுகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இல்லற வாசிகளாகிய நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும், துறவிகள் எந்த மாதிரியான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என பலவிதமான நியதிகள் உள்ளன. வெள்ளை நிறம் என்பது துறவிகளுக்கான நிறமாகவும், புனிதத்திற்கான நிறமாகவும் கருதப்படுகிறது.

அதேபோன்றுதான் காவி நிறமும் சன்னியாசத்திற்கு உகந்த நிறமாக கருதப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருப்பதாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். மஞ்சள் நிற உடையை நாம் உடுத்திக் கொண்டால் அது மங்களகரமாக இருக்கும் என்று கூறுவார்கள். கருப்பு நிறம் என்பது சிலருக்கு விருப்பமாகவும், அதே சமயம் சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கும்.

கருப்பு நிறம் என்பது துஷ்டிக்கு உகந்தது எனவும், அதனை எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும், ஏதேனும் ஒரு மரணத்திற்கு செல்லும் போதும் தான் இந்த கருப்பு நிற உடையை உடுத்த வேண்டும் என சிலர் அதனை ஒதுக்கி வைத்திருப்பார்கள். அதேபோன்று நமது குலதெய்வத்திற்கு கருப்பு நிறம் ஆகாது என்று கருப்பு நிற உடை மற்றும் கயிறை கட்ட அனுமதிக்க மாட்டார்கள். ஏதேனும் ஒரு விசேஷத்திற்காக அல்லது யாருக்கேனும் தானம் கொடுப்பதற்காக உடைகளை வாங்கினாலும் அதில் கருப்பு நிறம் வரக்கூடாது என்பதை பார்த்து பார்த்து வாங்குவார்கள்.

இந்த கருப்பு நிறம் என்பதை நாம் பார்த்தாலே எதிர்மறை எண்ணம் என்பது தோன்றிவிடும். ஏனென்றால் காலம் காலமாக இந்த நிறம் ஆகாது என பலரும் கூறி வருவதால், அதன் மேல் ஒரு எதிர்மறை எண்ணம் உருவாகி விடுகிறது. அதே போன்று அறிவியல் ரீதியாகவும் அடர் நிறமான கருப்பு நிறத்தினை வெயில் காலங்களில் அணியக்கூடாது என்றும் கூறியுள்ளனர். ஏனென்றால் இந்த கருப்பு நிறம் ஆனது சூரியனின் கதிர்வீச்சுகளை அதிகமாக ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டது.

இது மட்டுமல்லாமல் இந்த கருப்பு நிறம் என்பது சனி பகவானுக்கு உரிய நிறமாகவும் கூறப்படுகிறது. இந்த சனீஸ்வரருக்கு பயந்து கொண்டும் சிலர் கருப்பு நிறத்தை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் பொழுது கருப்பு நிற உடையை தான் அணிவார்கள். ஏனென்றால் அந்த கோவிலுக்கு மலைகளின் வழியாகத்தான் அனைவரும் செல்வார்கள். அப்போது அங்கு உள்ள வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், அந்தக் காட்டினுடைய சூழலில் பாதுகாப்பாக இருக்கவும் மாலை போடும் பொழுது கருப்பு நிறம் அணிந்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

இறைவனை நாம் தரிசனம் செய்யும் பொழுதும் அதாவது கோவிலுக்கு செல்லும் பொழுதும், நமது வீடுகளில் பூஜை செய்யும் பொழுதும் நாம் உடுத்தக்கூடிய உடையில் சாந்தம் இருக்க வேண்டும். அதேபோன்று நமது எண்ணத்திலும், நம்மை சுற்றியுள்ள சூழலிலும் அமைதி என்பது இருக்க வேண்டும். இந்த அமைதியை ஏற்படுத்த நிறங்களும் நமக்கு துணை புரிகிறது என்பதால்தான், நமது முன்னோர்கள் கருப்பு நிற உடையை அணியக்கூடாது என்று கூறியுள்ளனர்.

வேறு ஏதேனும் ஒரு இடத்திற்கு செல்கிறோம் என்றால் கருப்பு நிற உடையை அணிந்து கொள்ளலாம். ஆனால் கோவிலுக்கு அல்லது இறைவனை வழிபடக்கூடிய இடங்களில் கருப்பு நிற உடையை அணியக்கூடாது. அது நமக்கும் நம்மை பார்ப்பவருக்கும் ஒரு எதிர்மறை ஆற்றலை உருவாக்கி விடும். கோவிலுக்கு செல்லும் பொழுது நமக்கும், நம்மை சுற்றி இருப்பவருக்கும் ஒரு மன அமைதி என்பது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கருப்பு நிற உடைய கோவிலுக்கு செல்லும் பொழுது அணியக்கூடாது என்று கூறியுள்ளனர்.