ஒரு மரவெட்டி மரத்தின் கிளையின் மீது அமர்ந்து கொண்டு, அவன் அமர்ந்து கொண்டிருக்கும் அந்த கிளையையே வெட்டினானாம். உமா தேவியார் அவர்கள் பார்த்துவிட்டு இவன் என்ன முட்டாளாக இருக்கிறான், கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெருமானிடம் கூறினாராம்.
அதற்கு சிவபெருமான் அவர்கள், ஒருவேளை அந்த மரவெட்டி கீழே விழுந்து உதவிக்கு உன்னை அழைத்தால் நீ போய் காப்பாற்று, என்னை அழைத்தால் நான் போய் காப்பாற்றுகிறேன் என்று கூறினாராம். இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொண்டு இருவரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.
அவன் அமர்ந்து இருந்த கிளை இறுதியாக முறிந்து கீழே விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் அவன் இறந்தும் போய் விட்டான். அதனைக் கண்ட உமாதேவியார் என்ன இவன் இறந்து விட்டான் என்ற சிவனிடம் கேட்டார்.
அதற்கு சிவன் சொன்னாராம் அவன் எமனின் மனைவி “ஐயோ”வை அல்லவா கூப்பிட்டான், அதனால்தான் ஐயோ வந்து அவனது உயிரை எடுத்துக் கொண்டு போய்விட்டார் என்று கூறினாராம். இதனால்தான் ஐயோ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர்.
எமதர்மன் மனைவியின் பெயர் “ஐயை தேவி” ஆகும். காலப்போக்கில் அது மருவி ஐயோ தேவி என்று மாறியது. நாம் ஐயோ என்றால் எமதர்மன் மனைவி நம்மை அழைக்கிறார்கள் என்று வருவாள். யாரோ என் மனைவியை அழைக்கிறார்கள் என்று எமதர்ம ராஜாவும் வருவார். அதனால்தான் ஐயோ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவார்கள்.
பெற்றோர்கள் தனது குழந்தைகள் கீழே விழுந்து விட்டால் கூட, ஐயோ என்று பதறி கொண்டு தான் குழந்தையை தூக்குவார்கள். ஐயோ என்ற வார்த்தையை பயன்படுத்தும் பொழுது கீழே விழுந்த குழந்தையின் அழுகை இன்னும் அதிகமாக தான் மாறுமே தவிர குறையாது. ஏனென்றால் அந்த வார்த்தைக்கான பாதிப்பு அந்தக் குழந்தைக்கு சிறிதளவாவது வந்துவிடும். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.