BJP ADMK AMMK: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இதில் தமிழக வெற்றி கழகம் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அரசியலின் புதிய அலை என பேசப்படும் விஜய்யை கூட்டணிக்கு அழைத்த முயற்சியும் அதிமுக சார்பில் நடந்தது. கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுக அரசையே குறிவைத்து பேசிய பழனிசாமியின் கருத்து, விஜய்யை மறைமுகமாக ஆதரித்ததாக கருதப்பட்டது.
ஆனால் விஜய், திமுகவோ அதிமுகவோ உடன் கூட்டணி வைக்க மாட்டேன் எனத் தெளிவாக மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவுடன் இணைந்திருக்கும் அதிமுக, கொள்கை எதிரி என விஜய் கூறும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை தற்போது டிடிவி தினகரனும் எழுப்பியுள்ளார்.
இவரின் இந்த கருத்து அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவது போல உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இபிஎஸ்யை கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக எங்களால் வீழ்த்தப்படுவார் எனவும் கூறினார். விஜய்யை மீண்டும் மீண்டும் அழைப்பது சுவை கண்ட பூனை போல் உள்ளது.
அதை விஜய் ஏற்றுக்கொண்டால் அது தற்கொலைக்கு சமம் என்றும் அவர் கடுமையாக சாடினார். மேலும், வினை விதைத்தவன் வினை அறுப்பான். 2026 தேர்தலில் பழனிசாமி நிச்சயம் வீழ்ச்சியடைவார் என தினகரன் எச்சரித்தார். இதனிடையே, அதிமுக–பாஜக கூட்டணியின் எதிர்காலம் மற்றும் விஜய்யின் அரசியல் தீர்மானம் குறித்து அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன.

