‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் கரு உண்டாகும்’ என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் உண்மை என்றே கூறலாம். அறிவியல் ரீதியாக கூறினால் எவரும் அதனை பின்பற்ற மாட்டார்கள் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் ஆன்மிகம் ரீதியாக இந்த கருத்தினை கூறியுள்ளனர். சஷ்டி நாட்களில் விரதம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் இந்த உலகத்தில் ஏராள பேர் உள்ளனர்.
வருடா வருடம் வருகின்ற தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த சஷ்டி விரதம் வரும். இந்த ஆறாவது நாள் சூரசம்காரம் என்பது நடக்கும். ஏழாவது நாள் திருக்கல்யாணம் நடக்கும். இந்த ஏழு நாட்களும் முருகருக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறந்த பலனை நமக்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று மாதம் மாதம் வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என்று சஷ்டி விரதங்கள் வரும்.
இவற்றுள் குழந்தை பாக்கியம் வேண்டும் என நினைப்பவர்கள் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. இந்த சஷ்டி நாட்களில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்து விட வேண்டும். காலை மாலை என இருவேளையும் முருகருக்கு பூஜை செய்ய வேண்டும். அந்த பூஜையின் போது முருகனுக்கு மிகவும் பிடித்த வேல்மாறல், திருப்புகழ் போன்ற பதிகத்தை படிப்பது மிகவும் சிறப்பு. பெண்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தருபவர் முருகன். எனவே இந்த சஷ்டி நாட்களில் நாம் வேண்டிய அனைத்தும் கண்டிப்பாக நடக்கும்.
இந்த சஷ்டி நாட்களில் விரதம் இருந்து ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணாமலும் சிலர் இருப்பார்கள். ஒரு சிலர் இளநீர் அல்லது பால் இது போன்ற ஏதேனும் ஒன்றை குடித்துவிட்டும் விரதம் இருப்பார்கள். அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப விரதம் இருந்து கொள்ளலாம். இது கட்டாயம் கிடையாது. ஆனால் விரதத்தின் போது அதிகப்படியான பக்தியுடனும், முருகன் மீது அதிக நம்பிக்கையும் கொண்டிருந்தால் மட்டுமே நாம் வேண்டிய அனைத்தும் நிறைவேறும்.
ஒரு பிரச்சனை நீண்ட நாட்களாக இருக்கிறது அது தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் தேய்பிறை சஷ்டியிலும், எங்கள் குடும்பம் முன்னேற வேண்டும், ஒரு வளர்ச்சி என்பது ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் வளர்பிறை சஷ்டியிலும் விரதம் இருப்பது சிறப்பு. இந்த வழிபாட்டின் போது முருகருக்கு நெய்வேத்தியமாக காய்ச்சின பால், பழம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைக்க வேண்டும்.
இதேபோன்று மாலை நேரத்திலும் முருகனை வழிபாடு செய்ய வேண்டும். மாலை நேரத்தில் சற்கோண கோலம் என்பதனை போட்டு அதில் சரவணபவ என எழுதி, அதற்கு நடுவில் ஓம் எனவும் எழுதிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கோலம் போட்டு விளக்கேற்றி மாலை நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். காலை நேரத்தில் முருகருக்கு வைத்த நெய்வேத்திய பாலை நமது வீட்டில் உள்ள வேறு யாருக்கேனும் பிரசாதமாக கொடுத்து விடலாம்.
மாலை நேரத்தில் வைக்கக்கூடிய நெய்வேத்திய பாலை விரதம் இருப்பவர்கள் குடித்துவிட்டு அந்த விரதத்தினை முடித்துக் கொள்ள வேண்டும். சஷ்டி என்றாலே விரதம் இருந்து முருகனை வழிபடுவது என்பதுதான் ஐதீகம். எனவே இந்த நாட்களில் விரதம் இருந்து நாம் என்ன வேண்டி கேட்கிறோமோ அதனை கண்டிப்பாக அந்த முருகப்பெருமான் நமக்கு நிறைவேற்றித் தருவார்.