அனைத்து அமைச்சர்களும் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும்! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மீதமிருக்கின்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

அதில் நாட்டில் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வரும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 2வது முறையாக யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி மத்தியில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற நிலை இருந்துவரும் நிலையில், 2வது முறையாக பாஜக அந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.

இந்த நிலையில், அமைச்சர்களின் சிறப்பு கூட்டத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடத்தினார் அப்போது அவர் பேசும்போது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மையும், தூய்மையும், மிகவும் முக்கியம்.

அதனடிப்படையில், அனைத்து அமைச்சர்களும் பதவியேற்ற 3 மாதங்களுக்குள் தங்களுடைய மற்றும் தங்களுடைய குடும்பத்தினரின் அசையும், அசையா, சொத்துக்கள் தொடர்பான விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேபோல அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களும் தங்களுடைய மற்றும் தங்களுடைய குடும்பத்தினரின் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை அறிவிக்கவேண்டும், பொதுமக்கள் அறியும் விதத்தில் அது இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன் அரசுப்பணிகளில் தங்களுடைய குடும்பத்தினர் தலையிடாமல் இருப்பதை அனைத்து அமைச்சர்களும் உறுதிப்படுத்தவேண்டும். நாம் நம்முடைய நடத்தையால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

அரசு திட்டங்களை குறிப்பிட்ட காலத்திலும், தரமாகவும், நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் வழிகாட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் யோகி ஆதித்யநாத்.