ADMK: தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அதிமுகவில் பிரிவினை அதிகரித்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும், அவ்வாறு சேர்க்காவிட்டால், ஒருங்கிணைப்புப் பணிகளை என்னை போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து மேற்கொள்வோம் என்று கூறியிருந்தார் செங்கோட்டையன். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்து நீக்கினார்.
இதன் மூலம் செங்கோட்டையன் கட்சியின் அடிமட்ட தொண்டனாக மட்டுமே இருக்க முடியும் என்பது தெளிவானது. இது தொடர்பாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பு பணிகள் தொடர்பாக செங்கோட்டையன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவரின் அடுத்த அரசியல் நகர்வாக, நேற்று பசும்பொன்னில் நடைபெற்ற, விழாவில் ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், மூவரும் ஒன்றாக வந்தது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது.
கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருக்கும் செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் ஒன்றிணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை கட்சியிலிருந்து நீக்க சிறிதும் தயங்காத இபிஎஸ், செங்கோட்டையனை கட்சியிலிருந்து கூடிய விரைவில் நீக்கி விடுவார் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் செங்கோட்டையனிடம், கட்சிலிருந்து நீக்கினால் என்ன செய்வீர்கள் என்று நிருபர்கள் கேட்ட போது, நீக்கினால் சந்தோஷப்படுவேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் செங்கோட்டையனின் நீக்கம், உறுதியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

