PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களுக்கிடையே மோதல் முற்றிய நிலையில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றனர். அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு தன்னுடைய ஆதரவாளர்களை மற்றும் ராமதாஸ் நியமித்து வருகிறார். அதே போல் அன்புமணியும் ராமதாஸின் ஆதரவாளர்களை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
அண்மையில் ராமதாசுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கூட மருத்துவர் ஐயாவின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அவருடன் இருப்பவர்களை சும்மா விட மாட்டேன் என்று அன்புமணி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ராமதாஸ் படிக்காத மாடு மேய்க்கும் சின்ன பையன் கூட இப்படி பேச மாட்டான் என்றும், இந்த கட்சியை அரும்பாடுபட்டு உருவாக்கியது நான். இக்கட்சிக்கான முழு உரிமையும் எனக்கே உண்டு என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, சேலம் மாவட்டம் எடப்பாடியில் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ அருள் தலைமையில் ராமதாஸ் ஆதரவாளர்கள் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதை பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக இப்போதும் அதன் நிறுவனர் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது. தேர்தல் ஆணையம் எந்த இடத்திலும் பாமக அன்புமணிக்கு சொந்தம் என்று சொல்லவில்லை.
தலைவர் மட்டும் தானென்று கூறியுள்ளது. அந்த தலைவர் பதவியும் விரைவில் முடிய போகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு ராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார். பாமகவில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தந்தையும், மகனும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த சமயத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அவர்களின் பிரிவுக்கு மேலும் காரணமாக அமைகிறது என்று பாமக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

