DMK: அடுத்த வருடம் நடக்க போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள, திமுக பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது. கூட்டணி கட்சிகளிடம் இணக்கமாக செல்வது, கடந்த முறை தோல்வியுற்ற தொகுதிகளில் வெற்றி பெற அங்கு வலுவான அமைச்சர்களை நியமித்திருக்கிறது, நான்கரை ஆண்டுகளாக திமுக மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக பல்வேறு நிகழ்சிகளை நடத்துவது போன்ற முயற்சிகள் திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திமுகவை அரசியல் எதிரி என்று கூறி, விஜய் அரசியலில் குதித்துள்ளார்.
இவருக்கு இயல்பாகவே இளைஞர்கள் மற்றும் பெண்களின் செல்வாக்கு அதிகளவில் இருப்பதால், அந்த வாக்குகள் அத்தனையும் தவெகவிற்கு செல்ல வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்கையே நம்பியுள்ள நிலையில் அவை அனைத்தும் விஜய் பக்கம் செய்வதை அறிந்த திமுக அவர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் பணியில் மும்முரம் காட்ட ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது.
இதில் சுமார் 13 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கூடினர். இவ்வளவு கூட்டம் விஜய்க்கு கூடும் கூட்டத்தை முறியடிக்கும் நோக்கில் அமைந்ததாக கருதப்பட்டது. இவ்வாறு, இளைஞர்கள் மற்றும் பெண்களை குறிவைக்கும் திமுக அடுத்ததாக வரும் 29 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் எம்.பி. கனிமொழி தலைமையில் மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்த மாநாடு முழுக்க முழுக்க விஜய்க்கு எதிராக கூடும் கூட்டத்தை முறியடிக்கும் நோக்கிலே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.