தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி சில படங்களில் கதைநாயகனாகவும் வளம் பெறக்கூடியவர் யோகி பாபு. இன்று அதிகாலை இவருடைய கார் விபத்துக்குள்ளாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை தொடரான லொள்ளு சபா மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய இவர் சமீபத்தில் வெளியான ” பேபி & பேபி ” திரைப்படம் வரை தற்பொழுது திரையுலகில் சாதித்து நிற்கிறார். அதிக அளவு கடவுள் நம்பிக்கை கொண்ட இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கடவுள் குறித்து கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை என்றும் இதைக் குறித்து யாரும் கேட்க வேண்டாம் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொழுது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே அதிகாலை 3 மணி அளவில் இவருடைய கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நடிகர் யோகி பாபு அவர்களுக்கு எந்தவித காயமும் இன்றி உயிர் பிழைத்திருக்கிறார் என்றும் அதன் பின்னர் மற்றொரு காரை வரவழைத்து அதில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்றும் வெளியான தகவலை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.
நடிகர் யோகி பாபுவின் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை கார் இழந்து விட்டதாகவும் அதனால்தான் இந்த விபத்தானது நடைபெற்றது என்றும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புகளின் மீது ஏறி விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.