கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகளுக்கு பரந்த வழக்கு!
தீபாவளிக்கு முந்தைய நாள் கோவை மாவட்டத்தில் உக்கடம் என்ற பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறியது. வெடித்ததில் அந்த காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் காரை சுற்றி சிறு ஆணிகள், இரும்பு குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிஜிபி ஆறு தனிப்படைகள் அமைத்து இது குறித்து விசாரணை செய்து வந்தார். பின்பு அக்காரின் உயிரிழந்த ஜமேஷா என்பவரின் வீட்டையும் சோதனை செய்தனர்.
அவ்வாறு சோதனை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அவரது வீட்டில் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம், நைட்ரைட், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தது. இதனையடுத்து அவரது வீட்டை சுற்றியுள்ள சிசிடிவி அனைத்தையும் போலீசார் சோதனை செய்தனர். அதில் ஐவர் வெள்ளை நிற உடைகள் அணிந்து ஒரு மூட்டையை வெளியே தூக்கி சென்றது பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவியை அடுத்த தான் இந்த வழக்கானது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனென்றால், இவர்கள் அனைவரும் யார்? எதற்காக வெடிகுண்டு செய்து வந்தனர்? இவர்களுக்கு பின்னணியில் இருப்பவர் யாராக இருக்கும் என போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வந்தனர். இதற்கு அடுத்தபடியாக சிசிடிவியில் பதிவாகிய அந்த ஐவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த ஐவரிடமும் தற்பொழுது போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே இன்று மதியம் முதல் தேசிய புலனாய்வு அமைப்பு சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய உள்ளது.
காரில் உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து போலீசாரிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளனர். புலனாய்வு அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டாலும் இந்த வழக்கானது தற்பொழுது வரை கோவை காவல்துறை கீழ்தான் உள்ளது என அம் மாவட்ட காவல் ஆணையர் கூறியுள்ளார்.