அண்மையில் திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மறைவைத் அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் நடத்துவதாக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், மனுதாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
முன்னதாக திமுகவின் பொருளாளராக இருந்த துரைமுருகன் அதனை ராஜினாமா செய்துவிட்டிருந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். இதற்கான வேட்புமனுவினை திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்திருந்தார்.
கழக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட்டதால், காலியாக இருந்த பொருளாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு விருப்ப வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இதனை திமுக சட்டமன்ற உறுப்பினர்களான தா.மோ.அன்பரசன், மா.சுப்ரமணியன் உள்ளிட்டோருடன் சென்று அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தனது வேட்புமனுவை அளித்திருந்தார்.
இதன் பின்பு, அவர்களுக்கு பிறகு கட்சியில் உள்ள வேறு யாரும் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேறுயாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னதாக, அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகிய மூத்த தலைவர்கள் வகித்த பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்வானதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன் என துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிலையில், துரைமுருகன் மற்றும் டிஆர்பாலு ஆகியோரின் புதிய பொறுப்புகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) September 3, 2020
“திமுகவின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.