கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் கமல்ஹாசனுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை தெற்கு பகுதி மக்களின் வாக்குகளை பெற இருசக்கர வாகனத்தை ஓட்டிய அவர் குஜராத் சமாஜ் கலையரங்கில் நடந்த ஹோலி விழாவில் கலந்துகொண்டதுடன் வடமாநில மக்களுடன் தாண்டியா நடனமாடியும் அசத்தினார்.
பிரச்சாரத்தின் போது பேசிய ஸ்மிருதி இரானி, வானதி சீனிவாசனுக்கு அளிக்கும் வாக்குகள் நட்டின் வளர்ச்சிக்கு உண்டான ஓட்டு எனவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு 11 மருத்துவகல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனைகளை வழங்கி இருப்பதாகவும் கூறினார். கரோனா காலகட்டத்தில் 8 மாதங்களுக்குப் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டதை சுட்டி காட்டிய மத்திய அமைச்சர், அனைவரும் பாகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கொண்டார்.
இறுதியாக, மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, அதற்குண்டான தீர்வுகளை வழங்குவது, ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல், திட்டங்கள் தொடர்பாக வானதி சீனிவாசனுடன் விவாதிக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தயாரா..? என சவால் விடுத்தார்.