மகளிர் உரிமை தொகை குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில் தமிழக மக்களால் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட, மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்ல் அறிவித்தார்.
அதில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்ற போது, சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி தராத காரணத்தால் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களோடு வெளிநடப்பு செய்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் பல்வேறு வரி இனங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும், அதனை குறைக்க வழிவகை ஏதும் இந்த பட்ஜெட் அறிவிக்கப்படவில்லை என கூறினார்.
மகளிர் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் உதவி தொகை வழங்கப்படும் என்று கூறுவது எவ்வகையிலும் நியாயம் இல்லை என்று கூறிய அவர், திமுக ஆட்சியில் வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று கூறிவிட்டு, தற்போது முப்பதாயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை என்று கூறுவது நியாமான ஒன்றா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
7,000 கோடியை வைத்து கொண்டு ஒரு கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை எவ்வாறு வழங்க முடியும் என்றும், பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை என விமர்சனம் செய்துள்ளார்.