ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

Photo of author

By Pavithra

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச் சென்று கிருஷ்ணகிரி வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்நிலையில் அந்த லாரியானது இன்று 4:30 மணி அளவில் மேலுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மூன்று லாரிகளில் வந்த மர்ம நபர்கள்,செல்போன்களை ஏற்றிச்சென்ற பார்சல் லாரியை வழிமறித்துயுள்ளனர்.

பின்னர் செல்போன் ஏற்றிச்சென்ற லாரியில் இருந்த இரண்டு ஓட்டுனர்களையும் கண்ணைக்கட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்று இருவரின் கை கால்களை கட்டி போட்டு விட்டு செல்போன் லாரியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து லாரி ஓட்டுனர்கள் உடனடியாக சூளகிரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பெயரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட சூளகிரி காவல்துறையினர்,சூளகிரி அளுகுபாவி சாலையோரம் அருகே செல்போன் பார்சல் லாரியை கண்டுபிடித்தனர்.

அந்த லாரியை சோதனை செய்தபோது, கடத்தல்காரர்கள் செல்போன்களை கொள்ளையடித்து விட்டு லாரியை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.