10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும்:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் பத்து நாளுக்கான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமென்று அரசால் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு நாட்களில் மட்டுமே அரசு 431.03 கோடி வருமானத்தை ஈட்டியது.
அதேபோன்று இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிற்கும் நிலையில் அதற்கு முந்தைய தினமான அக்டோபர் 22 மற்றும் 23 தேதிகளில் தலா 200 கோடிகளுக்கும்,24 ஆம் தேதி தீபாவளியன்று 200 கோடி என மொத்தம் 600 கோடிக்கு இந்த ஆண்டு மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக டாஸ்மாக் கடைகளில் பத்து நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் 40 சதவீதம் நடுத்தர ரகம் மதுபானங்கள் 20% உயர்தர ரக மதுபானங்கள் 40% சாதாரண ரகம் மதுபானங்கள் என்று கடைகளில் இருப்பு வைத்திருக்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பறந்துள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மதுபான கிடங்குகளில் உள்ள சரக்குகள் மற்றும் கோப்புகள் மற்றும் அதன் பதிவேடுகள் எதிர்வரும் வடகிழக்கு பருவம் மழையினால் சேதாரம் அடையா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் இருப்பில் உள்ள மதுபான பெட்டிகள் மற்றும் அதன் பதிவேடுகள் வெள்ள நீரால் பாதிக்கப்படாதவாறு தரையில் இருந்து உயர்த்தப்பட்டு பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.