Central Government: கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தற்போது தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. மொத்தமாக ரூ.2999 கோடி நிதியை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்த கிராமப்புற மக்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) 2005ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படும் இந்த திட்டத்தில், விவசாயிகள், பெண்கள் மற்றும் பல்வேறு கிராமப்புற மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஊதியம் வழங்குகிறது.
மத்திய அரசு நிதி வழங்கப்படாததை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியிருந்தனர். கடிதம் அனுப்பியதன் பேரில் தற்போது ரூ.2999 கோடி நிதியானது விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையாக ரூ.1246 கோடியை கூடுதலாக வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்குவதாகவும், பாஜக அல்லாத மாநிலங்களை புறக்கணிப்பதாகவும் திமுக கடும் குற்றச்சாட்டு முன் வைக்கிறது.
இந்த நிதி விடுவிப்பு தமிழக கிராமப்புற மக்களுக்கு ஓர் நிம்மதியாக அமைந்துள்ளது. வேலை வாய்ப்பை உறுதி செய்யும் இந்த திட்டம், மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது.