100 அடி உள் வாங்கிய கடல்! வேதாரண்யத்தில் நடந்த சம்பவம்!!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 100 அடி அளவுக்கு கடல் உள்வாங்கியுள்ளது. இந்த சம்பவத்தால் பொது மக்களும் மீனவர்களும் கடலில் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக கனமழை பெய்து வந்தது. நேற்று(டிசம்பர்23) அதிகாலை முதல் மழை பெய்வது நின்றது. இதையடுத்து பனிப்பொழிவு தொடங்கியது.
இந்த நிலையில் வேதாரண்யம் சன்னதி கடலானது இன்று(டிசம்பர்23) காலை முதல் சுமார் 100 அடி தூரம் வரை உள்வாங்கியுள்ளது. வேதாரண்யம் சன்னதி கடல் உள்வாங்கி 100 அடி தூரம் வரை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
கடல் உள்வாங்கி சேரும் சகதியுமாக இருப்பதால் பொது மக்களும், மீனவர்களும் கடலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடல் உள்வாங்கி இருப்பதால் அலைகள் இல்லாமல் கடல் அமைதியாக காணப்படுகிறது. கடல் நீர் உள்வாங்கியதை கண்டு பொது மக்களும், மீனவர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் “பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியுள்ளது. இன்னும் ஒரு சில தினங்கள் காற்று நன்றாக வீசி அலைகள் எழுந்தவுடன் கரையில் இருக்கும் சேறும் சகதியும் கரைந்து சீரான நிலைக்கு வந்துவிடும்” என்று கூறினர்.