11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
புதுச்சேரியில் வரும் கல்வி ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளி சீருடை வழங்கும் விழாவில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசி உள்ளார்.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கும் பணியினை திருவள்ளுவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். பதினொன்றாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு செல்லும் மாணவிகள் சீருடையை பெற்றனர்.
தொடர்ந்து விழாவில் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் கல்வித்துறைக்கு மட்டும் ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களையும் நல்ல முறையில் கொடுக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். அரசு கொடுக்கும் திட்டங்களை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, கல்வியை சிறப்பாக கற்று வல்லவர்களாக உருவாகி, மாநிலத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களின் நலன் கருதி வரும் கல்வி ஆண்டு முதல் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு முதல் இது செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர் மாணவர்கள் இதனைக் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.