விவசாயிகளுக்கு எச்சரிக்கை! கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழைந்த 130 யானைகள்!!

Photo of author

By Parthipan K

கர்நாடக மாநிலம் பன்னர்கெட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் 130 காட்டு யானைகள் நுழைந்துள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் என்பதால் கேழ்வரகு கொள்ளு போன்ற பயிர்கள் பயிரிடப்படுவது வழக்கம். இந்த தானியங்களை தின்பதற்காக, ஆண்டுதோறும் கர்நாடக வனப்பகுதியில் இருந்து யானைகள் தமிழக வனப்பகுதிக்கு வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கர்நாடக வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்கு வந்துள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக் கோட்டத்தில் இந்த யானைகள் இரண்டு கூட்டமாக பிரிந்து முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றில் 70 யானைகள் தளி வனப்பகுதியிலும், எஞ்சிய யானைகள் ஜவலகிரி வனப்பகுதியிலும் தங்கியுள்ளன.

எனவே, தளி மற்றும் ஜவலகிரி வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், இரவு நேர காவலை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். நிலத்தில் தீப்பந்தம் ஏற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். விடிந்த பிறகு வீட்டை விட்டு வர வேண்டும் என்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் வீடு திரும்பிவிட வேண்டும் என்றும் ஆடு, மாடு மேய்க்கவோ, விறகு சேகரிக்கவோ காட்டுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.