175 கி.மீ வேகத்தில் பந்துவீசி வியக்க வைத்த இலங்கை வீரர்:17 வருட சாதனை முறியடிப்பு !
சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த 17 வயது மத்திஷா பதிரானா என்ற பவுலர் 175 கி மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார்.
உலகளவில் வேகமாக பந்துவீசும் பவுலர்களுக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சோயிப் அக்தர், மிட்செல் ஸ்டார்க், பிரெட் லி மற்றும் ஷான் டைட் போன்றோர் மிக வேகமாகப் பந்துவீசி பேட்ஸ்மேன்களை கதறடித்துள்ளனர்.
இதில் கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானின் சோயிப் அக்தர் இங்கிலாந்துக்கு எதிராக வீசிய பந்து 163.1 கி. மீ வேகத்தில் பதிவாகி இன்றளவும் மிக வேகமான பந்து என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளது. ஆனால் இந்த சாதனை 17 ஆண்டுகளுக்குப் பிறகு 17 வயது இளம் வீரர் ஒருவரால் தகர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 19 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 19 யதுக்குட்பட்டோர் போட்டி நடந்தது. அப்போது பந்து வீசிய மத்திஷா பதிரானா 175 கி.மீ வேகத்தில் வீசியதாக பதிவு செய்யப்பட்டது. இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதன் மூலம் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் கைவசமிருந்த 17 ஆண்டுக்கால சாதனை ஒன்றைத் தகர்த்துள்ளார்.
ஆனால் இது உண்மையான வேகமில்லை; ஏதேனும் இயந்திரக் கோளாறு காரணமாக இப்படி தவறாக பதிவாகியிருக்கலாம் என இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் போட்டி முடிந்து 3 நாட்களுக்கு மேலாகியும் ஐசிசி இதுவரை இயந்திரக் கோளாறு என எதையும் அறிவிக்காததால் அது உண்மையான வேகம்தான் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.