நான் என்ன செய்தேன்! குடும்ப சுமைக்கு காய்கறி விற்றது குற்றமா? தாக்கிய போலீஸ்! உயிரிழந்த சிறுவன்!

Photo of author

By Kowsalya

உத்திரபிரதேசத்தில் 17 வயது சிறுவன் காய்கறி விற்று கொண்டிருந்த நிலையில் ஊரடங்கு மீறியதாக போலீசார் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா முழுவதிலும் கொரோனாவில் இரண்டாவது அலை ஆட்டிப்படைத்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு பொது முடக்கங்களை அறிவித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது.

 

உத்திரபிரதேசத்திலும் ஊரடங்கு உள்ள நிலையில், உன்னவ் என்ற மாவட்டத்தில், பங்கார்மாவு என்ற நகரில் உள்ள பாத்பூரி என்ற பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று தனது வீட்டிற்கு வெளியே காய்கறி விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார்.

 

இதனை பார்த்த காவல்துறையினர் அந்த சிறுவன் ஊரடங்கு மீறியதாக கூறி லத்தியால் அவனை தாக்கியுள்ளனர். பெற்றோர்கள் போலீசாரை தடுத்தும் அந்த சிறுவனை மேலும் தாக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் அவனை பலமாகத் தாக்கி உள்ளனர்.

 

போலிஸாரின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்காத அந்த சிறுவன் உடல் நிலை பாதிப்பு அடைந்துள்ள நிலையில் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு காவல்துறையினர் கொண்டு போய் சேர்த்து உள்ளனர். அந்தச் சிறுவனை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அந்த சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டார் என்ற அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளனர். இதைக் கேட்டு அறிந்த உறவினர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் அந்த பகுதி மக்கள் அனைவரும் போலீசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

பொதுமக்களையும் அந்த சிறுவனின் பெற்றோர்களையும் உயர் அதிகாரிகள் வந்து சமாதானம் செய்துள்ளனர். மேலும் இந்த செயலை செய்த போலீசாரின் மீது வழக்கு தொடுக்கப்படும் என்ற உறுதியையும் அளித்துள்ளனர்.

 

சிறுவன் இறந்ததை அடுத்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில் சிறுவனை தாக்கிய விவகாரத்தில் தலைமை காவலர் விஜய் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊர்க்காவல் படை வீரர் சத்யபிரகாஷ் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளனர்.