நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது 1971ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர் சீதை படங்கள் அவமதிக்கப்பட்டதாகவும் பெரியார் முன்னிலையிலேயே இது நடைபெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெரியாரின் ஆதரவாளர்கள் ரஜினிகாந்த் நடக்காத ஒன்றை தெரிவித்துள்ளார் என்றும் அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தற்போது ஊடகம் ஒன்றில் 1971ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் இதழின் புகைப்படம் வெளிவந்து உள்ளது. அதில் சேலம் பேரணி குறித்த விரிவான கட்டுரை ஒன்று ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
இந்த கட்டுரையில் சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஊர்வலத்தில் ராமர் சிலை அவமதிக்கப்பட்டதாகவும் திமுக தவிர வேறு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த ஊர்வலத்தை அனுமதித்து இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நேற்று மன்னிப்பு கேட்க முடியாது என்று அதற்கு ஆதாரமாக அவுட்லுக் இதழை காண்பித்தபோது துக்ளக் இதழை அவர் காண்பிக்க வேண்டும் என பெரியார் ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்கள். தற்போது அந்த ஆதாரம் வெளிவந்துள்ளது. இதனையடுத்து பெரியாரின் ஆதரவாளர்கள் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார்களா? அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்கள் கேட்டு பிரச்சனை நீட்டித்துக் கொண்டு போவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.