நோய் தொற்றுக்கிடையில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்ற சூழ்நிலையில், 10 மற்றும் 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த வருடம் சற்று தாமதமாகவே தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் மற்ற மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடக்குமா என்று கேள்வி எழுந்திருக்கிறது.
இருந்தாலும் அவர்களுக்கான தேர்வு நிச்சயமாக நடைபெறும் என்று கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. அதனடிப்படையில் வருகின்ற 13-ஆம் தேதிக்குள் தேர்வு நடத்தி முடிக்கும் விதத்தில் அட்டவணையையும் வெளியிட்டிருக்கிறது.
இப்படியான சூழ்நிலைக்கிடையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், அக்னிநட்சத்திரம் தொடங்கியிருப்பதால் கத்தரி வெயிலில் கடுமையையும் வாட்டி வதைக்கும் நிலைமையை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்து ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியாகும் என சென்ற ஒரு வாரத்திற்கும் மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தியாவின் வட மாநிலங்களில் இந்த வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்ற காரணத்தால், சில மாநிலங்களில் பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு சில குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருக்கிறது. சில மாநிலங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முடிவு என்ன என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. கடந்த 2ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கும்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை செய்து முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு ஆரம்பமாகிறது. அதனைத் தொடர்ந்து 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ஆரம்பித்து நடைபெறுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடைவெளி விட்டு தேர்வு நடைபெறவுள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலின் காரணமாக, பெரியவர்களே வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையிலிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில். மாணவர்களை தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு வர சொல்லலாமே மற்ற நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கினால் அவர்களின் உடல் நலன் காக்கப்படும் என்று கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்து வந்தனர்.
அந்த விதத்தில் சென்னையில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் இது குறித்து பத்திரிகையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் தெரிவித்த அவர், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் தேர்வில்லாத நாட்களில் பள்ளிக்கு மாணவர்கள் வரத்தேவையில்லை வெயிலின் தாக்கம் காரணமாகவும், மாணவர்கள் உடல் நலன் கருதியும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.