27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா..! மூடப்பட்ட அரசு பள்ளிகள்!

Photo of author

By Parthipan K

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆந்திரப் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வின்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள, மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விழியநகரம் மாவட்டத்தில் 27 அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்களுக்கும், டாட்டிராஜூரு மண்டல் பள்ளியைச் சேர்ந்த 9 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனால் அம்மாவட்ட கல்வி அதிகாரி நாகமணி, அரசு பள்ளிகளை ஒரு வாரம் வரை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். நிலைமை சீரடைந்ததும் மீண்டும் வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.