புகழ்பெற்ற பண்டிகையை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 29-ஆம் தேதி விடுமுறை!!
இந்தியாவில் கேரள மாநிலம் மற்றும் தென் தமிழகத்திலும் கொண்டாடப்படுகின்ற ஒரு பாரம்பரியமிக்க சிறப்பு திருவிழா ஓணம். மகாபலி சக்கரவர்த்தி மன்னனின் ஆணவத்தை அடக்குவதற்காக விஷ்ணு பகவான் வாமனராக அவதரித்து சக்கரவர்த்தியிடம் மூன்றடி இடம் தானமாக கேட்டதாகவும், சக்கரவர்த்தி வழங்கியவுடன் முதல் அடியை பூமியிலும், இரண்டாவது அடியை வானத்தையும் அளந்த திருமால் மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அவரை அழித்து செருக்கினை அடக்குகிறார்.
திருமால் மாபலியை அழிக்கும்போது மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய மக்களை ஆண்டுதோறும் வந்து சந்திக்க தனக்கு அருள் செய்ய வேண்டும் என்று விஷ்ணு பகவானிடம் கோரிக்கை வைக்கிறார். அந்த கோரிக்கையை ஏற்று திருமால் மகாபலிக்கு அருள் புரியவே அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் திருநாளாய் திருவோண திருநாளாகவும், புத்தாண்டாகவும் கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். அதேபோல் ஏற்கனவே கோவை மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறையை ஈடு செய்ய செப்டம்பர் 16ஆம் தேதி பணி நாள் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.