இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
14வது ஊதிய ஒப்பந்தம், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவறையற்ற வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் நேற்று தொடங்கினர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொமுச, சிஐடியு உட்பட 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட ஆளும் கட்சி ஆதரவு சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை.
எனினும், சென்னையில் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு ஓரளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், மின்சார ரயிலில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும் அதிக அளவில் கூட்டங்களை ஏற்றிச் செல்கின்றன.
இதே போன்று, பிற மாவட்டங்களிலும் சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. அரசு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.