உயிரைக் காக்க 3 கி.மீ. தூரம் ஓடிய டாக்டர்! போக்குவரத்து நெரிசலால் நேர்ந்த அவலம் 

0
125
dr_nandakumar
dr_nandakumar

உயிரைக் காக்க 3 கி.மீ. தூரம் ஓடிய டாக்டர்! போக்குவரத்து நெரிசலால் நேர்ந்த அவலம்

பெங்களூரு:

நம் உயிரை காக்கும் மருத்துவர்கள் கடவுள் மாதிரி என்பார்கள்.அதை உணர்த்தும் வகையில் பெங்களூரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றான கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், நோயாளிக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக காரிலிருந்து இறங்கி ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தூரம் ஓடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் கோவிந்த் நந்தகுமார் இறைப்பை குடல் அறுவைசிகிச்சை மருத்துவர்.  இவர் பெங்களூரில் இருக்கும் சர்ஜாபூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில், லேப்ராஸ்கோப்பிக் முறையில் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய அவசர கதியில் விரைந்து சென்று கொண்டிருந்தார்.

ஒரு வழியாக அவர் மருத்துவமனையை நெருங்கும் நேரத்தில் தீடீரென மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதை உணர்ந்தார். அவர் இருக்கும் இடத்திற்கும் மருத்துவமனைக்கும் இடையே 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவு மட்டுமே இருந்துள்ளது. ஆனால், கூகுள் மேப் அதனைக் கடக்க 45 நிமிடங்கள் வரை ஆகலாம் என்று காட்டியுள்ளது. இது குறித்து பகிர்ந்து கொண்ட அவர் இது மிகவும் மோசமான நிலையை எனக்கு உணர்த்தியது என்கிறார்.

டிராபிக் நிலையை பார்த்ததும் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தேன். காரை விட்டு இறங்கி, நடந்தே மருத்துவமனையை அடைவது என்பது தான் சரியாக இருக்கும் என முடிவெடுத்தேன். நல்ல வேளையாக என்னுடைய காருக்கு ஓட்டுநர் வைத்திருந்தேன். அதனால் அவரிடம் காரை எடுத்துவர சொல்லி அங்கேயே விட்டுவிட்டு சாலையில் இறங்கி ஓட ஆரம்பித்தேன். ஏற்கனவே நான் ஒரு தீவிர உடற்பயிற்சியாளன் என்பதால், எனக்கு அப்போது சாலையில் ஓடுவது மிகவும் எளிதாகவே இருந்தது.

ஏறக்குறைய சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடினேன். எதிர்பார்த்தபடி அறுவை சிகிச்சைக்கு சரியான நேரத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்தேன் என்கிறார்.

இத்துடன் அவர் மற்றொரு தகவலையும் கூறுகிறார். அதாவது, இப்படி சாலையில் ஓடுவதும், இறங்கி நடப்பதும் தனக்கு ஒன்றும் புதிதல்ல என்றும், பல வேளைகளில் பெங்களூருவின் பல பகுதிகளில் மருத்துவமனைகளுக்குச் செல்லும் போது இப்படி தான் சென்றிருக்கிறேன் என்கிறார். பல சமயங்களில் ரயில் தண்டவாளங்களைக் கூட கடந்து ஓடியிருக்கிறேன்என்றும் அவர் கூறுகிறார்.

இதுமட்டுமல்லாமல் அவர் மற்றுமொரு கவலையான தகவலையும் பகிர்ந்து கொள்கிறார். அதாவது நான் மருத்துவர். நன்கு திடகாத்திரமாக இருக்கிறேன். அதனால் இப்படி போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் இறங்கி ஓடிவிடுகிறேன். ஆனால் நோயாளியுடன் இருக்கும் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் போது அவருடன் இருக்கும் உறவினர்களின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். இந்த மாதிரியான நெரிசலில் ஆம்புலன்ஸுக்கு வழி விடக் கூட இடமிருக்காது என்று கவலையுடன் கூறுகிறார்.

Previous articleமீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ
Next articleகண்ணிமைக்கும் நொடியில் மாணவன் பலி! போலீசார் வழக்கு பதிவு!