எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன் 20 ஆயிரமா? வசமாக சிக்கிய திமுக!
தற்போதைய பாஜக மாநில தலைவர் தான் அண்ணாமலை. இவர் இந்த பதவி பொறுப்பை ஏற்கும் முன் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பதவி பொறுப்பேற்ற முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களை கொண்டு நிவாரணம் அளித்து வருகிறது. தற்பொழுது இந்த வெள்ளப் பெருக்கால் பயிர்கள் நாசம் அடைந்து பல விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இவ்வாறு இருக்கையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்தார்.அதில் அண்ணாமலை கூறியது, தொடர் கனமழையால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு நிவாரண தொகையை அதிகரித்து தர வேண்டும் என்று கூறினார். முதலில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்கினார். தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ 20 ஆயிரம் மட்டுமே நிவாரண நிதி அளிப்பதாக கூறியுள்ளார்.இது எந்த விதத்தில் நியாயம் என்பது போல பல கேள்விகளை எழுப்பினார்.
அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளை நண்பர்களாக பார்த்த முதல்வர் இப்போது எப்படிப் பார்க்கிறார் என்று மேலும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். முதல்வர் அவர்கள், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்ளப்படும் வீடியோக்களை மக்கள் முன்னிலையில் ஒரு டூரிஸ்ட் பேக்கேஜ் மாதிரி காட்டுகின்றனர். ஆனால் வெள்ளபெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காணச் செல்லும்போது அங்குள்ள நிலத்தில் அழுகி கிடைக்கும் பயிர்களை கையில் எடுத்துப் பார்த்தால் தான் தெரியும் விவசாயிகளின் நிலை என்று அண்ணாமலை கூறினார்.
கூடிய விரைவில் முதல்வர் தான் செய்த தவறை திருத்திக் கொள்வார் என்று கூறினார். மேலும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த நிகழ்வு பற்றியும் பேசினார். அதில் அவர் கூறியது, ஸ்ரீரங்கம் கோயிலில் கருத்தியல் மண்டபத்தில் ஒருவரின் சொற்பொழிவை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது எந்தவித குற்றமும் இல்லை. அதனால் அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது மிகப்பெரிய குற்றம் அதற்கு பதிலாக தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரப்படும் என்று கூறினார். மேலும் தற்பொழுது இருந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து வரும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி நாளை மறுநாள் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ 5,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார்.