
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா வயது 27. இவருக்கும் கோயம்புத்தூரை ஈஸ்வர மூர்த்தி சித்ராதேவி தம்பதியினரின் மகன் கவின்குமாருக்கும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு சீர்வரிசையாக 500 பவுன் நகை, 70 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர கார் தருவதாக பேசப்பட்டது. பின்னர் 300 பவுன் நகை, 70 லட்சம் ஆடம்பர கார் மற்றும் இரண்டரை கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு ரிதன்யாவின் கணவர் கவின்குமார் உடல் ரீதியாகவும், மாமனார் மாமியார் மனரீதியாகும் தினமும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மீதி கொடுக்க வேண்டிய 200 பவுன் நகையை எப்போ உங்க வீட்டுல கொடுப்பாங்க என்று அனுதினமும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த விஷயத்தை ரிதன்யா நிறைய முறை தன்னுடைய தந்தையிடம் சொன்னபோது ஆரம்பத்துல எல்லாம் கொஞ்சம் அப்படி தான் இருக்கும், நீ கொஞ்சம் சமாளிச்சுக்கோ என்று அறிவுரை சொல்லியுள்ளார்.
சில முறை கணவர் வீட்டில் நடக்கும் கொடுமை பொறுக்கமுடியாமல் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் ரிதன்யா. பின்னர் அவருடைய பெற்றோர் பெண்ணுக்கு புத்திமதி சொல்லி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று (29.6.2025) கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு காரில் சென்று நடுவழியில் காரை நிறுத்திவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் ரிதன்யா.
நீண்டநேரம் கார் அங்கேயே நின்றதால் சந்தேகமடைந்த மக்கள் காவல் துறையில் புகார் அளித்து வாகனத்தை திறந்து பார்த்துள்ளனர். காரினுள் பிணமாக கிடந்துள்ளார் ரிதன்யா. இறப்பதற்கு முன்னர் தன்னுடைய சாவிற்கு காரணம் என்னுடைய கணவர், மாமனார், மாமியார் தான் என கண்ணீர் மல்க தனது தந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார் ரிதன்யா.
இதனால் போலீசார் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார், மாமியாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நகைக்காக தங்கம் மாதிரி இருக்குற இந்த அப்பாவி பொண்ணை கொன்னுட்டிங்களேடா என்று ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினரை சமூக வலைத்தளங்களில் மக்கள் திட்டி வருகின்றனர்.