பேருந்துக்கு தீ வைத்ததன் காரணமாக 33 பயணிகள் உடல் கருகி பலி! மாலி நாட்டில் பரபரப்பு!

Photo of author

By Hasini

பேருந்துக்கு தீ வைத்ததன் காரணமாக 33 பயணிகள் உடல் கருகி பலி! மாலி நாட்டில் பரபரப்பு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா ஆதரவு பயங்கரவாத  உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இங்கு இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து பலவித தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு ராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் காரணமாக அங்கு ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருவது அங்கு எப்போதும் நடக்கும் ஒரு செயல்தான். இந்நிலையில் அந்நாட்டின் மொப்தி மாகாணம் சொவிரி நகரில் இருந்து பென்டிய்ஹரா நகருக்கு நேற்று ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் அப்போது 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

சாங்கோ ஹெரி என்ற அந்தப் பகுதியில் சென்றபோது அந்த பேருந்தை இடைமறித்த பயங்கரவாதிகள் பேருந்து ஓட்டுநரை கொலை செய்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகளில் பலர் பேருந்தில் இருந்து தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் அந்த கொடூரமான பயங்கரவாதிகள் பேருந்தின் கதவுகளை மூடி அதற்கு தீயிட்டுக் கொளுத்தி விட்டனர். இந்த தாக்குதலின் காரணமாக பேருந்தில் பயணம் செய்த முப்பத்தி மூன்று நபர்களும், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள், அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். மேலும் இதுகுறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.