பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!!

Photo of author

By Sakthi

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!!

தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகின்றது. இந்நிலையில் , கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் ரவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது.இந்நிலையில் இன்று காலை 9:30 மணியளவில் எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் குடோன் உட்பட அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. வெடிவிபத்தால் அப்பகுதியில் கரும்புகை பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் ஏற்கனவே ஒரு பெண் மற்றும் சிறுவன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உரிழந்த நிலையில் தற்பொழுது மேலும் 3 பேரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.இதில் பட்டாசு ஆலை உரிமையாளர் ரவி அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ருத்திகா,மகன் ருத்திஸ் மற்றும் ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி, ஹோட்டல் அருகே வெல்டிங் ஷாப் வைத்திருந்த இம்ரான், இப்ராகிம் உள்ளிட்டோர் ஆவர்.

மேலும் 10 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

இந்நிலையில் வெடி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் சரபு மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.தற்பொழுது ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முறையான அனுமதி பெற்று தான் ரவி அவர்களின் விபத்துக்குள்ளான ஆலை இயங்கி வந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சரபு கூறியுள்ளார்.