உத்தர பிரதேசத்தில்யில் நீண்ட ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடிகளில் விகாஸ் துபே ஒருவர்.2001ம் ஆண்டில் உத்தர பிரதேச முக்கிய அரசியல் பிரமுகரான சந்தோஷ் சுக்லாவை காவல் நிலையத்திலேயே வெட்டி கொன்ற வழக்கு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல் வழக்குகள் துபே மீது நிலுவையில் உள்ளன.
அவரை பிடிக்க பல ஆண்டுகளாக உத்தர பிரதேச போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த ரவுடியும் அவரின்
கூட்டாளிகளும் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கிராமத்திற்கு ரவுடிகளை பிடிக்க துணை எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையிலான போலீஸ் படை கிராமத்தில் நுழைந்தது.கிராமத்தில் நுழைந்த போலீஸார் மீது கடுமையான தாக்குதல் விகாஸ் கும்பல் நடத்தி பின் அந்த கும்பல் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றது.
இந்த தாக்குதலில் 8 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றவாளிகளை பிடிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணையிட்டார்.