9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்
தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடந்த 6 ஆம் தேதி இந்த 9 மாவட்டங்களில் உள்ள 23,998 இடங்களுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
இந்த முதல்கட்ட வாக்கு பதிவின் போது 77.43 சதவீதம் ஓட்டு பதிவாகியது. இந்நிலையில், இந்த 9 மாவட்டங்களில் இன்று 2 ஆம் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடங்களுக்கும், 626 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 1324 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறும்.
இதனையடுத்து வரும் 12 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.