நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு!
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 9 பேர் பலியானதாக இதுவரை வந்த செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள இந்துக்குஷ் மலைகளை மையமாகக் கொண்டு நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்புகள் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் குலுங்கியது.
இதனால் பாகிஸ்தானில் உள்ள லாகூர், ராவல் பிண்டி, குவேட்டா, இஸ்லாமாபாத், கோஹட், லக்கி மார்வெட், பெஷாவர், போன்ற பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. 160 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. இங்கே டெல்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் நிலதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் இரவு நேரம் என்று பாராமல் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் நின்று கொண்டிருந்தனர்.
சென்ற மாதம் துருக்கி சிரியா ஆகிய நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் காயம் உற்றனர். பலர் வீடு வாசல் களை இழந்து தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பாதிப்புகளை இன்னும் மனதை விட்டு நீங்காத நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் தற்போது ஏற்பட்டு வருவது தொடர்கதையாக நிகழ்ந்து வருவது மக்கள் மனதில் பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.