ஆப்ரேஷன் கங்கா! அடுத்தடுத்து சிறப்பு விமானங்கள் மூலமாக மீட்கப்படும் உக்ரைன் வாழ் இந்தியர்கள்!

Photo of author

By Sakthi

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்கள் மூலமாக இந்தியர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போலந்து நாட்டில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.

அதையடுத்து நேற்று முன்தினம் இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உடனடியாக உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விதமாக சில அறிவிப்புகள் வெளியானது.

அதாவது உக்ரைனின் எல்லை நாடுகளுக்கு சிறப்பு தூதர்களாக மத்திய அமைச்சர்களை நியமனம் செய்து மத்திய அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்திய அமைச்சர்கள் சிறப்பு தூதர்களாக சென்று அங்கிருந்து இந்திய மக்களை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கான பணியில் ஈடுபட்டார்கள்.

அதனடிப்படையில், இந்தத் திட்டத்தின் கீழ் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, உள்ளிட்ட நாடுகளிலிருந்து உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.அதோடு இந்த மீட்புப் பணியில் இந்திய விமானப் படை விமானங்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றன.

அதனடிப்படையில், ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரிலிருந்து சிறப்பு விமானம் நேற்று இரவு புது டெல்லி வந்தடைந்தது. இதில் மாணவர்கள் உட்பட 218 இந்தியர்கள் பயணம் செய்தார்கள். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய மாணவர்களை வரவேற்ற மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுடன் கலந்துரையாடினார் என்று சொல்லப்படுகிறது.

அதன் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் தெரிவித்ததாவது உக்ரைனிலுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் நரேந்திரமோடி முன்னெடுத்திருக்கிறார் என்று அவர் கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் முயற்சியின் காரணமாக, உக்ரைனில் உள்ள மாணவர்கள் இடையே நாடு திரும்பும் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. இந்தியா திரும்பிய மாணவர்கள் உக்ரைனிலுள்ள தங்களுடைய நண்பர்களிடம் பத்திரமாக நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இதற்காக அடுத்தடுத்து விமானங்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதற்காக 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சிறப்பு தூதர்களாக சென்றிருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.