சேலம் ரயில் நிலையதில் வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆகியவை ஆதரவு தெரிவித்து வருகின்றனர் மேலும் பன்னீர்செல்வம் பக்கமிருந்து பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் தலைமைப் பதவி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்ட ஒரு நபர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமை பொறுப்பு வழங்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் சேலம் ஜங்சன் ரயில் நிலையத்திற்கு குண்டு வைப்பேன் என்று கூறி செல்போனை துண்டித்துள்ளார். இதனையடுத்து சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து சேலம் மாநகராட்சி நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அதன்பேரில் சேலம் மாநகராட்சி போலீஸ் மற்றும் சேலம் ரயில்வே போலீஸ் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் ஆதாரமாக மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண் மட்டுமே உள்ளது. அந்த செல்போன் சிக்னல் மூலம் அவர் பெயர் வினோத் அவருக்கு 30 வயது இருக்கலாம் என்றும் போலீசார் கண்டுபிடித்தனர்.இதனையடுத்து போலீசார் அந்த நபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த மிரட்டலை அடுத்து சேலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்மித் ஆகியோர் தலைமையில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பார்சல் அலுவலகம் இருசக்கர வாகனம் மற்றும் கார் நிறுத்துமிடங்கள் என வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் உள்ள சேலம் ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் சேலம் மாவட்டத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.