“வின்னர்-2 படம் வேறமாரி இருக்கும்…” நடிகர் பிரசாந்த் நம்பிக்கை… ரசிகர்கள் குஷி!

Photo of author

By Vinoth

நடிகர் பிரசாந்த் நடிப்பில் விரைவில் அந்தகன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

90 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். பாலுமகேந்திரா, மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்தார். 2000களின் தொடக்கத்துக்குப் பிறகு அவரின் மார்க்கெட் குறைய ஆரம்பித்து அவரது படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தன.

இதற்கிடையில் அவரின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் தோன்றி விவாகரத்து வரை சென்றது. அதனால் அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறைந்தது. தற்போது இந்தி சூப்பர் ஹிட் படமான ’அந்தாதூன்’ திரைப்படத்தின் ரீமேக்கான அந்தகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பல விஷயங்களைப் பேசிய அவர் வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்து பேசினார். அதில் “வின்னர் 2 வந்தா முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும்” எனக் கூறியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2003 ஆம் ஆண்டு வெளியான வின்னர் திரைப்படம் திரையரங்க வெளியீட்டின் போது மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் தொலைக்காட்சிகளில் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வடிவேலு-பிரசாந்த் நகைச்சுவை காட்சிகள் வயிறுவலிக்க ரசிகர்களை சிரிக்க வைத்தன. இன்றளவும் பல மீம்கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட்டாக அந்த காட்சிகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.