இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்தை தாண்டுவதே கடினம்: பிரபல ஆய்வு நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பு நிதியாண்டில் 5 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும் என்று ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ அறிவித்துள்ளது.
நிதித்துறையானது தொடர்ந்து நெருக்கடியில் இருக்கிறது. வங்கிகளில் அதிகரித்துவரும் வாராக் கடன்கள் காரணமாக, வங்கிகளானது மேலும் கடன் அளிப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன. இதன் விளைவாக நிதி சுழற்சியானது குறைந்து விட்டது. இதனால் சிறு வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள் கடுமையான சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். தொழில் முதலீடுகள் குறைந்து விட்டன. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடுமையான பின்னடைவை ஏற்படுத்துகிறது என்றும் அந்த ஆய்வு நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையை சமாளிக்கும் வகையில், தற்போதைய மத்திய அரசு பல்வேறு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்த மேலும் சில காலம் ஆகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலீடுகளை பெருக்குவதற்காக மத்திய அரசு நிறுவனங்களுக்கான நிறுவன வரியில் 10 சதவீதம் அளவிற்கு குறைத்துள்ளது. மேலும் அந்நிய முதலீடு சம்பந்தமான பல கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக மத்திய ரிசர்வ் வங்கியும் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில் தொடர்ந்து 5 முறை ரெப்போ விகிதத்தை இந்த ஆண்டில் மட்டுமே குறைத்துள்ளது. ஆனால் இது போன்ற நடவடிக்கைகளின் தாக்கத்தை சில ஆண்டுகளுக்கு பிறகே தெரிந்து கொள்ள முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சியானது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்ததுள்ளது. இந்நிலையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
இவ்வாறு பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தாலும் இந்தியாவின் பொருளாதார நிலையானது முன்பு இருந்ததை விட மோசமடைந்து இருப்பதாக மூடி’ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவான 4.5 சதவீதமாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை இந்த பொருளாதார சரிவுக்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
நாட்டின் 8 முக்கிய ஆதார தொழில்துறைகளின் உற்பத்தியானது 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் ஆட்டோமொபைல் துறையானது கடுமையான சரிவை சந்தித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் அதன் உற்பத்தி அளவானது 25 சதவீதம் அளவில் சரிந்துள்ளது. இதனால் அந்த துறையில் வேலையிழப்பும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை செலுத்தும்.
நாட்டின் பொருளாதார நிலை இருக்கும் இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 5 சதவீதத்தை கூட தாண்டுவது கடினம் என்று அந்நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது.