பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு
பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென பேட்டி எடுத்தவரின் செல்போனை பிரதமர் பறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் நாளை பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சிக்க்கும் ஜெர்மி கார்பைன் என்பவரின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது செய்தி சேனல் ஒன்றின் நிருபர் ஒருவர் தனது மொபைல் போனை எடுத்து அதிலிருந்து ஒரு புகைப்படத்தை காண்பித்து அந்த புகைப்படத்தில் உள்ள நான்கு வயது சிறுவன் அரசு மருத்துவமனையில் தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் உடனடியாக அந்த நிருபரின் செல்போனை பறித்து தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டார். இந்த காட்சி அடங்கிய வீடியோவை அந்த நிருபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து அந்த வீடியோ பயங்கர வைரல் ஆகி இரண்டு மணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் அதனை பார்த்தனர். இந்த வீடியோவை பார்த்த பெரும்பாலானோர் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நாளை பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இதனால் பெரும் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.