“இதுக்கு மேல பிரச்சன வேணாம்…” ட்விட்டருக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!
எலான் மஸ்க் மேல் ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது.
இதற்கிடையில் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும், அது சம்மந்தமான தரவுகள் வேண்டும் என எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்டிருந்தார். அந்த விவரங்கள் வரும் வரை ட்விட்டரை வாங்குவதை கிடப்பில் போடுவதாக அறிவித்தார்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் அதிரடியாக ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ந்தன. இந்நிலையில் இப்போது எலான் மஸ்க்குக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுபற்றி தற்போது பேசியுள்ள எலான் மஸ்க் “மேலும் மேலும் பிரச்சனையை வளர்க்க வேண்டாம்” என எச்சரிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.