மூன்றாவது முறையாக இணையும் விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணி.. ராட்சசன் 2 வை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!
இயக்குனர் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதையடுத்து அவர் நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் இந்த படத்துக்காக சில ஆண்டுகள் காத்திருந்த ராம்குமார், ஒரு கட்டத்தில் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து தனுஷ் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராம்குமார் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படமும் கைகூடவில்லை.
இதனால் ஒரு கட்டத்தில் தனது ஹிட் படமான ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் ராம்குமார் இறங்கியுள்ளார். இந்த படத்திலும் விஷ்ணு விஷால் அமலா பால் இருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.