சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த மாதம் 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டுமென பெரும்பாலோனோர் வலியுறுத்தினார்.
பெற்றோரை பிரிந்து இருந்ததால் மன அழுத்தம் காரணமாக பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதாக விடுதி காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, தனது மகளின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாத்திமாவின் தந்தை லத்தீப் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த ஐ ஐ டி மாணவி பாத்திமாவின் தற்கொலை வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.